தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு: சிறுதானிய மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பெருமிதம்

கேடிசி நகர்: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று நெல்லையில் நடந்த சிறுதானிய மாநாட்டை துவக்கி வைத்து சபாநாயகர் அப்பாவு பேசினார். தமிழ்நாடு சிறுகுறு மற்றும் கிராமிய தொழில் முனைவோர் சங்கம் மற்றும் எப்எக்ஸ் பொறியியல் கல்லூரி தொழில் முனைவு மேம்பாட்டு மையம் சார்பில் சிறு தானிய மாநாடு மற்றும் தொழில் வளர்ச்சி கருத்தரங்கம், கண்காட்சி, நேற்று தொடங்கியது. ஸ்காட் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்  ஜான் கென்னடி வரவேற்றார். கிராமிய தொழில் முனைவோர் சங்க  கூட்டமைப்பின் செயலாளர் ஞானசேகர் முன்னிலை வகித்தார். சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்து சிறு தானிய மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:

இன்றைய சூழ்நிலையில் இயற்கை விவசாயம் தேவையான ஒன்றாக உள்ளது. அனைவரும் சிறு தானியங்களை உணவாக பயன்படுத்த வேண்டும்.

அதுதான் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். இன்று ரசாயன உரங்கள் மற்றும் ரசாயனம் கலந்த உணவை மக்கள் பயன்படுத்துவதால் பல்வேறு ேநாய்களுக்கு ஆட்படுகின்றனர். எனவேதான் சிறு தானியத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் சிறு தானியங்களை அதிகமாக விளைய வைக்க வேண்டும். அவர்கள் விளைவிக்கிற தானியங்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைவரும் துரித உணவுகளை தவிர்த்து சிறு தானிய உணவு வகைகளை பயன்படுத்த வேண்டும். நாட்டிலேயே தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. இதற்கு மறைந்த முதல்வர் கலைஞர்தான் காரணம். அவர் 1996ல் முதல்வராக இருந்த போதுதான், பெங்களூருக்கு அடுத்தபடியாக சென்னையில் தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து டைட்டல் பார்க் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கினார்.

இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதுபோல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுக்கு 3 வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மூன்றரை லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மாநில அரசு மூலம் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடன்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஸ்காட் குழுமங்களின் நிறுவனர் கிளிட்டஸ் பாபு, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன், எம்எஸ்எம்இ வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர் ஜெரீனாபதி ஆகியோர் பேசினர். முன்னதாக விவசாயிகள், தொழில் முனைவோருக்கு சபாநாயகர் அப்பாவு விருதுகள் வழங்கினார். சிறு தானிய கண்காட்சியையும் பார்வையிட்டார். இதில் வங்கி மேலாளர்கள், கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கு, கண்காட்சி தொடர்ந்து இன்றும் நடக்கிறது.

Related Stories: