ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் மழை இல்லாததால் வாடும் மிளகாய் செடிகள்-விவசாயிகள் கவலை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லாததால் மிளகாய் செடிகள் வாடி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்ககூடிய ஆர்.எஸ்.மங்கலத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது.

ஆர்.எஸ்.மங்கலம், புல்லமடை, சவேரியார்பட்டினம், வல்லமடை, மேலமடை, ஆனி முத்தன்குடியிருப்பு, மணியன் பச்சேரி, பிச்சனகோட்டை, சேத்திடல், முத்துப்பட்டினம், செங்குடி, பூலாங்குடி, வாணியக்குடி, அரியான்கோட்டை, பணிதிவயல், செங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் விளையும் குண்டு மிளகாய், வத்தலாக காய வைக்கப்படுகிறது. இந்த வகை மிளகாய் வத்தலை மதுரை, விருதுநகர், திருச்சி, பட்டுக்கோட்டை தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் மட்டும் இந்த ஆண்டு ஆயிரம் ஏக்கருக்கு மேலாக மிளகாய் விவசாயம் செய்துள்ளனர் இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சரியான மழை இல்லாததால் நெல் விவசாயம் முற்றிலும் பொய்த்து போனது. கடந்த ஆண்டு நன்கு விளைந்த நெற்கதிர்கள், அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கனமழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

இந்த ஆண்டாவது விவசாயம் கை கொடுக்கும் என நம்பி ஏராளமான தொகையை கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்த நிலையில், இந்த ஆண்டும் சரியான மழை இல்லாமல் நெல் விவசாயம் பொய்த்து விட்டது. நெல் விவசாயத்தில் பட்ட கடனை  மிளகாய் விவசாயம் செய்து அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் மிளகாய் விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டினர்.  மிளகாய் விதைப்பு செய்தல், களை எடுத்தல், உரமிடுதல், பூச்சி மருந்து அடித்தல் என பல்வேறு வகையில் செலவு செய்தனர் ஆனால் இவ்வளவு செலவு செய்தும், அறுவடை செய்யும் நேரத்தில் உரிய மழை இல்லாததால் மிளகாய் செடிகள் வாடி வருகின்றன.  உரிய மகசூல் கிடைக்காததால் ஏமாற்றமே மிச்சம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள்.

இது குறித்து ஆர்எஸ் மங்கலத்தை சேர்ந்த விவசாயி செந்தில் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் இழப்பு ஏற்பட்டால் விவசாயம் செய்வதையே மறந்து விடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 4 வருடமாக சரியான நெல் விவசாயம் இல்லை. அதே போல் மிளகாய் விவசாயமும் சரிவர கை கொடுக்கவில்லை. கூடுதல் செலவுகள் செய்து கடுமையாக உழைத்து வருகிறோம் மிளகாய் செடிகளில் பூ பூத்து, காய் காய்த்து, பழம் பழுக்க கூடிய நேரத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை.

ஒரு ஏக்கருக்கு  உழுதல், விதை வாங்குதல், விதைத்தல், களை எடுத்தல், உரமிடுதல், மருந்து அடித்தல் என ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த நிலையில் மழை ஏமாற்றி விட்டது. மிளகாய் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: