பெரணமல்லூர் அருகே ₹63.50 லட்சத்தில் பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற்சங்க கூட்டுறவு கட்டிடம்-கலெக்டர் திறந்து வைத்தார்

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே ₹63.50 லட்சத்தில் இருளர் பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற்சங்க கூட்டுறவு கட்டிடத்தை கலெக்டர் பா.முருகேஷ் நேற்று திறந்து வைத்தார்.

பெரணமல்லூர் அடுத்த கெங்காபுரம் சமத்துவபுரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடி இனமக்கள் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள் கடந்த 2018ம் ஆண்டு சமத்துவபுரத்தில் திருவண்ணாமலை மாவட்ட பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் சங்கத்தை ஏற்படுத்தி மாவட்ட தொழில் மையத்தில் பதிவு செய்தனர். அந்த சங்கத்தில் 150 பேர் உறுப்பினராக உள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையிடம் இருந்து 2020-21ம் ஆண்டில் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பாம்புகளின் விஷம் சேகரித்து பதப்படுத்தி வியாபாரம் செய்யும் தொழில் தொடங்க ₹31 லட்சம் கடனுதவி பெற்றனர். இதையடுத்து, கெங்காபுரம் சமத்துவபுரம் பகுதியில் தனியாரிடம் குத்தகையாக இடத்தை வாங்கி அங்கு கூட்டுறவு சங்க அலுவலக கட்டிடம், ஆய்வக கட்டிடம், பாம்பு இருப்பு அறை, ஆழ்துளை கிணறு, குழாய் அமைத்து நிலம் சமன்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக, பாம்புகளிலிருந்து விஷம் எடுத்து நுண் துகள்களாக மாற்ற தேவையான ஆய்வக கருவிகள் வாங்க தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் மூலம் ₹32.50 லட்சம் நிதி பெற்று ஆய்வு கருவிகளை வாங்கினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இந்த சங்கத்தின் ஆய்வக அலுவலகம் மற்றும் பாம்பு பண்ணை திறப்பு விழா  நடைபெற்றது. கலெக்டர் பா.முருகேஷ் கலந்து கொண்டு பாம்பு பண்ணை மற்றும் கூட்டுறவு சங்கம், ஆய்வக கருவி கட்டிடங்களை திறந்து வைத்து சங்க உறுப்பினர்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான லைசன்ஸ், அதற்கு உண்டான உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் செய்யாறு ஆர்டிஓ அனாமிகா, உதவி செயற்பொறியாளர் ஆனந்தி, ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், பிடிஓக்கள் மோகனசுந்தரம், ஹரி, ஒன்றிய பொறியாளர் குருபிரசாத், கூட்டுறவு தொழிற் சங்க நிறுவனர் சேகர், தலைவர் தெய்வானை, துணை தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: