கேரளாவில் ஆட்சியைப் பிடிப்போம் என்பது மோடியின் எல்லை மீறிய ஆசை: பினராய் விஜயன் கருத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று மோடி கூறுவது அவரது எல்லை மீறிய ஆசையாகும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. இதையொட்டி டெல்லியில் பாஜ தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தினார். அப்போது கட்சி தொண்டர்களிடையே அவர் பேசும்போது, கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் இருந்த திரிபுராவில்  ஆட்சியைப் பிடித்தது போல் கேரளாவிலும் விரைவில் பாஜ ஆட்சியைப் பிடிக்கும் என்றார். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தன்னுடைய முகநூலில் கூறியிருப்பது: கேரளாவிலும் ஆட்சியை பிடிப்போம் என்று மோடி கூறியது அவரது எல்லை மீறிய ஆசையாகும். நம் நாட்டில் சிறுபான்மையினர் அனுபவிக்கும் துயரங்களுக்கு யார் காரணம் என்று அனைவருக்கும் தெரியும். எனவே அவர்கள் எந்தக் காரணம் கொண்டும் பாஜவுக்கு சாதகமான முடிவை எடுக்க மாட்டார்கள். சில தற்காலிக லாபங்களுக்காக சிலர் வேண்டுமென்றால் பாஜக பக்கம் போகலாம். ஆனால் அதே எண்ணத்துடன் தான் சிறுபான்மையினர் அனைவரும் இருப்பார்கள் என்று பாஜ எண்ணுவது கேலிக்கூத்தாகும். கேரளா மதசார்பற்றவர்கள் வாழும் ஒரு மாநிலமாகும். இந்த மாநிலத்தில் பாஜவின் எந்தத் திட்டமும் பலிக்காது. இவ்வாறு பினராய் விஜயன் தன்னுடைய முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: