தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறைக்குள் சுவிட்சர்லாந்து பெண்ணை முத்தமிட்ட கான்ஸ்டபிள்: ரயிலில் வைத்து அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்

கான்பூர்: தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறைக்குள் சுவிட்சர்லாந்து பெண்ணை முத்தமிட்ட கான்ஸ்டபிளை ரயிலில் வைத்து கான்பூர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். டெல்லியில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு ராஜ்தானி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பாட்னாவுக்குச் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது வருங்கால கணவரும் இருந்தார். மேற்கண்ட ரயில் ஹத்ராஸ் அருகே வந்ததும், அந்த பெண் ரயிலில் இருந்த கழிவறைக்குச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து கழிவறையில் இருந்து வெளியே வந்தார். அப்பகுதியில் நின்றிருந்த ரயில்வே கான்ஸ்டபிள் ஜிதேந்திரா என்பவர், அந்தப் பெண்ணின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து மீண்டும் கழிவறைக்குள் இழுத்து முத்தமிட முயன்றார். அந்தப் பெண் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி தனது இருக்கைக்கு சென்றார். அங்கிருந்த தனது வருங்கால கணவரிடம் நடந்த விஷயத்தை கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், அந்த ரயில் கான்பூர் சென்ட்ரலுக்கு வந்தவுடன் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் ஜிதேந்திரா குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அவர்கள் உடனடியாக ஜிதேந்திராவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ரயில்வே இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா திவேதி கூறுகையில், ‘ஜஸ்புரா பகுதியை சேர்ந்த கான்ஸ்டபிள் ஜிதேந்திரா, சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சென்ட்ரல் ஸ்டேஷனில் பணியில் உள்ளார். அவர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்ட அவர் மீது கான்பூர் மத்திய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதே நேரம், ரயில்வே போலீசில் இதுபோன்று பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட மேலும் சில காவலர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: