ஷாருக்கானின் பங்களாவிற்குள் குதித்த 2 இளைஞர்கள்: போலீசார் விசாரணை

மும்பை: நடிகர் ஷாருக்கானின் பங்களாவிற்குள் சுவர் ஏறி குதித்த இரு இளைஞர்களை பிடித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது பங்களாவுக்குள் இரண்டு இளைஞர்கள் சுவர் ஏறி குதித்தனர். அப்போது பங்களா வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் அந்த இரு இளைஞர்களையும் பிடித்து பாந்தரா போலீசில் ஒப்படைத்தனர். இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாந்த்ரா மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஷாருக்கானின் பங்களாவுக்குள் (மன்னத்) அத்துமீறி சுவர் ஏறி குதித்து உள்ளே இரண்டு இளைஞர்களை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் குஜராத்தில் இருந்து வந்ததாகவும், ஷாருக்கானை சந்திக்க விரும்பியதாகவும் தெரிவித்தனர். இருந்தும் முன் அனுமதியின்றி ஷாருக்கானின் பங்களாவிற்குள் நுழைந்ததால் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

கவுரி கான் மீது வழக்கு

மும்பையைச் சேர்ந்த  கிரத் ஜஸ்வந்த் ஷா என்பவர், லக்னோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை  வாங்குவதற்கான முழுத் தொகையையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம்  கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட ரூ. 86 லட்சம் வழங்கினார். ஆனால் அவருக்கான  பிளாட் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து கிரத் ஜஸ்வந்த் ஷா,  சிட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘மேற்கண்ட கட்டுமான  நிறுவனத்தின் விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவியும்  தயாரிப்பாளருமான கவுரி கான் (பிராண்ட் அம்பாசிடர்) நடித்துள்ளார்.

அவரது விளம்பர நம்பகத்தன்மையின் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்பை வாங்க பணம்  கட்டினேன். ஆனால் பிளாட் ஒதுக்கப்படவில்லை. எனவே என்னை ஏமாற்றியவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். அதையடுத்து பிராண்ட்  அம்பாசிடர் கவுரி கான், துளசியானி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டெவலப்மென்ட்  லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குநர் அனில் குமார் துளசியானி, இயக்குநர்  மகேஷ் துளசியானி ஆகியோர் மீது ஐபிசி பிரிவு 409-இன் கீழ் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

Related Stories: