மழையில்லாததால் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 30அடியாக சரிவு: விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையில்லாததால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 30அடியாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள 72 அடிகொண்ட பரம்பிக்குளம் அணையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 15அடியாக இருந்தது. அதன்பின் பெய்த தென்மேற்கு பருவமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

நீர்பிடிப்பு பகுதியிலிருந்தும், சோலையார் அணையிலிருந்தும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து முழு அடியை எட்டியது.அதன்பின் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மழையின்றி  அணைக்கு தண்ணீர் வரத்து குறைய ஆரம்பித்தது. இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் வரை வினாடிக்கு 300கன அடிவரை தண்ணீர் வரத்து இருந்துள்ளது. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம்  நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், மழையின்றி தண்ணீர் வரத்து மிகவும் குறைவால், பரம்பிக்குளம் அணையின் நீர் மட்டம் விரைவாக குறைகிறது. தற்போது பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 20கன அடியாக குறைந்துள்ளது. தண்ணீர் வரத்து மிகவும் குறைவால் நீர்மட்டம் 30அடியாக சரிந்துள்ளது.

நேற்றய நிலவரபடி  வினாடிக்கு 29கன அடி தண்ணீரே வந்து கொண்டிருந்தது. இருப்பினும் திருமூர்த்தி அணைக்கு கான்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 1000அடியாக தொடர்ந்துள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். பிஏபி பாசன பகுதிகளுக்கு தேவையான தண்ணீர் சேமித்து வைக்கப்படும் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Related Stories: