ஜேஎன்யூ பல்கலை. புதிய விதிமுறை போராட்டங்களில் ஈடுபட்டால் ரூ.50ஆயிரம் அபராதம்: மாணவர்கள் கடும் எதிர்ப்பால் சுற்றறிக்கை வாபஸ்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் வன்முறை, தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டால் ரூ.50ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கும் வகையிலான புதிய விதிமுறையானது இன்று முதல் அமலுக்கு வருகின்றது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் திரையிடுவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர் விடுதி சூறையாடப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

‘மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் நடத்தை விதிகள்’ என்ற தலைப்பில் 10 பக்கங்கள் கொண்ட விதிமுறைகளை ஜேஎன்யூ வெளியிட்டுள்ளது. இதன்படி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் போராட்டங்கள், போலி ஆவணம் போன்ற செயல்களுக்கு தண்டனை மற்றும் ஒழுங்கு முறை விசாரணை, வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஒழுங்கீனமான செயல்களுக்கு ஏற்ப ரூ.5ஆயிரம் முதல் ரூ.50ஆயிரம் வரை அபராதம் விதிப்பது, தற்காலிகமாக நீக்குவது அல்லது சேர்க்கையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டால் ரூ.20ஆயிரம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டால் ரூ.30ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் புதிய விதிமுறையின்படி ஒரு மாணவர் மற்றொரு மாணவர், ஊழியர்கள், பேராசிரியர்களிடம் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபட்டால் ரூ.50ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளுக்கு மாணவர்கள், பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, புதிய விதிகளுக்கான சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக பல்கலை. துணை வேந்தர் சாந்தி ஸ்ரீ நேற்றிரவு தெரிவித்தார்.

Related Stories: