பறக்கை நெல்கொள்முதல் நிலையம் முன்பு காங்கிரீட் தளம் அமைக்கப்படுமா?.. தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் கோரிக்கை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு மாவட்டத்தில் 9 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. இந்த நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 100 கிலோ எடைகொண்டு சன்னரகம் நெல் ரூ.2165க்கும், மோட்டரகம் ரூ.2115க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பறக்கை நெல்கொள்முதல் நிலையம் புத்தளத்தில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனை பறக்கையில் திறக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து பறக்கை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நேரடிநெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது நடந்து வரும் கும்பபூ அறுவடையின்போது அறுவடை செய்யப்படும் நெல்களை கொள்முதல் செய்வதற்காக கடந்த 9ம் தேதி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் நெல்லை நெல்கொள்முதல் நிலையங்களில் கொடுக்க தொடங்கினர். இதுவரை 90 டன் நெல்களை விவசாயிகள் கொடுத்துள்ளனர். நெல்கொள்முதல் நிலையத்தின் முன்பு போதிய இடவசதி இருந்தும், தண்ணீர் தேங்குவதால், நெல் கொண்டு வரும் வாகனங்கள் மண்ணில் சிக்கும் நிலை இருந்து வருகிறது.

இதனால் பறக்கை நெல்கொள்முதல் நிலையத்திற்கு முன்பு தண்ணீர் தேங்காதவகையில் காங்கிரீட் தளம் அமைத்து கொட்டகைபோட்டு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முன்னோடி விவசாயி பெரியநாடார் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் பறக்கையில் நெல்கொள்முதல் நிலையத்தை திறந்துள்ளது. நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய அளவு நெல்களை இருப்பு வைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. சுமார் 50 டன் அளவு மட்டுமே நெல் இருப்பு வைக்கமுடியும். கூடுதல் நெல் வரும்பட்சத்தில் அந்த நெல்லை வெளியே எடுக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

நெல்கொள்முதல் நிலையத்திற்கு நெல் கொண்டு வரும் வகையில் நெல்கொள்முதல் நிலையம் முன்பு மண் போட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதைக்கு மண்கொட்டும்போது நெல்கொள்முதல் நிலையத்திற்கு முன்புள்ள கால்வாயும் அடைப்பட்டுள்ளது.  தற்போது கால்வாயில் தண்ணீர் வருவதால், தண்ணீர் நெல்கொள்முதல் நிலையம் அமைந்துள்ள வளாகத்திற்குள் தேங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் வாகனங்களில் நெல்கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி நெல்கொண்டு வரும்போது, நெல்கொள்முதல் நிலையத்தின் முன்பு தார்பாய் விரித்து அதில் நெல்லை கொட்டி, அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் கொடுக்கும் நெல் தண்ணீரில் நனையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை ஏற்றுவதற்கு வந்த லாரி சகதியில் சிக்கிக்கொண்டது. இதுபோன்ற நிலை ஏற்படாத வகையிலும், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு பறக்கை நெல்கொள்முதல் நிலையத்தின் முன்பு காங்கிரீட் தளம் அமைத்து மேற்கூரை அமைக்கவேண்டும். மேலும் நெல்கொள்முதல் நிலையத்திற்கு வாகனம் வந்து செல்லும் வகையில் நெல்கொள்முதல் நிலையம் முன்புள்ள கால்வாயில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் குழாய் பதித்து, பாதை அமைத்துக்கொடுக்க வேண்டும். என்றார்.

Related Stories: