ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளை பொருளை இருப்பு வைத்து பொருளீட்டு கடன்கள் பெறலாம்: ஏப்.1ம் தேதி முதல் கொப்பறை தேங்காய் ரூ108க்கு கொள்முதல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் வடசேரி, ஈத்தாமொழி, திங்கள்சந்தை, தொடுவட்டி, களியக்காவிளை, குலசேகரம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டதுடன், விவசாயிகளுக்கு கடன் வசதியும் செய்துகொடுக்கப்படுகிறது. இது குறித்து கன்னியாகுமரி விற்பனைக்குழு செயலாளர் விஷணப்பன், தனி அலுவலர் முனைவர் சுந்தர் டேனியர் பாலஸ் ஆகியோர் கூறியதாவது: விவசாயிகளுக்கென ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விலை நிலவரம் தெரிந்து விற்க வசதி, இலவச தரம் பிரிப்பு வசதி, சரியான எடை, மறைமுக ஏலம், போட்டி மூலம் தரத்திற்கேற்ப நியாயமான விலை, கமிஷன், தரகு போன்ற எந்த பிடித்தமும் இல்லாமல் விற்க வசதி, விளைபொருட்களை உலர வைக்க உலர்கள வசதி, விளைபொருட்களை இருப்பு வைக்க கிட்டங்கி வசதி ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விற்பனை செய்யப்பட்ட விளைபொருட்களுக்கான பணம் உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. வணிகர்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சரியான எடை, தேவைக்கேற்ப ஒரே இடத்தில் வாங்கும் வசதி, தரம் பார்த்து வாங்கும் வசதி, கமிஷன் தரகு இன்றி விளைபொருட்களை வாங்கும் வசதி, விளைபொருட்களை இருப்பு வைக்க கிட்டங்கி வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல் அறுவடைக் காலங்களில் விளைபொருளுக்கு ஏற்படும் விலை வீழ்ச்சியால் உழவர்கள் பெரும் இழப்பிற்கு உள்ளாகாமல் இருக்க ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள கிடங்குகளில் விளைபொருட்களை அதிகபட்சமாக ஆறு மாத காலம் இருப்பு வைத்து விலை ஏறுமுகத்தில் இருக்கும்போது அதை விற்பனை செய்து கூடுதலாக வருவாயை ஈட்டலாம்.

விளைபொருளை கிட்டங்கியில் இருப்பு வைக்கும் சமயத்தில் அன்றாட செலவுக்கு இத்திட்டத்தின் மூலம் இருப்பில் உள்ள விளைபொருள் மதிப்பில் உழவர்களுக்கு 75 விழுக்காடு அளவிலும், அதாவது அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன்பெறலாம். பொருளீட்டுக் கடனுக்கு முதல் 15 நாட்களுக்கு வட்டி இல்லை. எஞ்சிய காலத்திற்கு எளிய வட்டியான 5 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பொருளீட்டுக் கடனை திரும்ப செலுத்துவதற்கான கால வரம்பு ஆறு மாத காலம் ஆகும். பொருளீட்டுக்கடனுக்காக விளைபொருட்களை இருப்பு வைப்பதற்கு கிடங்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. விவசாயிகள் இருப்பு வைக்கும் விளைபொருளுக்கு காப்பீடு மற்றும் மருந்து தெளிக்கும் செலவு விற்பனைக்குழு நிதியிலிருந்து செலவு செய்யப்படுகிறது.

தற்போது இவ்வசதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி, திங்கள்சந்தை, குலசேகரம் மற்றும் தொடுவட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வணிகர்களின் நலனுக்காக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் தங்களது பொருளீட்டுக்கடன், அதாவது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம். இக்கடனுக்கான வட்டி விகிதம் 9 விழுக்காடு ஆகும். பொருளீட்டுக் கடனை திரும்ப செலுத்துவதற்கான கால வரம்பு ஆறு மாத காலம் ஆகும். இதுபோல் தென்னை விவசாயிகளுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுது தேங்காய் விலை மிகவும குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் தங்களது தேங்காய் விளைபொருளை தொண்டியுடன் அல்லது தேங்காய் கொப்பரையாக மாற்றம் செய்து வடசேரி, திங்கள்சந்தை மற்றும் குலசேகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள கிட்டங்கிகளில் இருப்பு வைத்து பொருளீட்டுக்கடன் பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வாரத்தில் திங்கள்சந்தை மற்றும் வடசேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 வீதத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நடைபெற உள்ளது. இந்த கொள்முதல் 6 மாதங்கள் இருக்கும். கன்னியாகுமரி மாவட்ட தென்னை விவசாயிகள் வடசேரி மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தங்களது பெயர் மற்றும் அலைபேசி எண்ணை பதிவு செய்துகொள்ளலாம். என்றனர்.

ரூ34 லட்சம் கடன்

ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் விளைபொருட்களை விற்பனை இருப்பு வைத்த பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2022-2023ம் ஆண்டில் இதுவரை ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் வணிகர்களுக்கு ரூ.8 லட்சம் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் ரப்பர் இருப்பு வைத்து கடன் கொடுத்த வகையில் இதுவரை ரூ.8 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. பொருளீட்டு கடன் பெறுவதற்காக விவசாயிகள் 70 டன் விளைபொருட்களை கிட்டங்கிகளில் இருப்பு வைத்துள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

கன்னியாகுமரி விற்பனைக்குழுவின் கீழ் வடசேரி, திங்கள்சந்தை மற்றும் தேரூர் நெல் கிட்டங்கிகளில் வைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2115 வீதம் நெல் விளைபொருள் கொள்முதல் செய்யப்படுவதால் நெல் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தங்களது நெல் விளைபொருளை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உழவர்சந்தைகளின் நன்மைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி மற்றும் மைலாடி பகுதிகளில் உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது வடசேரி உழவர்சந்தையில் மாலைநேர கடைகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. உழவர்சந்தைகளில், வாடகையின்றி உழவர்களுக்கு கடைகள், எடையிடும் கருவிகள், தினசரி காய்கறி விலை விவரங்கள், உணவக வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி வாகன நிறுத்துமிடம் மற்றும் விவசாயிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விற்பனை செய்யும் காய்கறிகளுக்கு எவ்விதமான கட்டணம் மற்றும் கமிஷன் கிடையாது.

நுகர்வோர்களுக்கு தரமான காய்கறிகள், வெளிச்சந்தையினை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வடசேரி உழவர்சந்தையில் தென்னை உழவர் உற்பத்தியாளர் குழுவின் மூலம் நீரா பதனி விற்பனை செய்யப்படுகிறது.மேற்கண்ட அனைத்து வசதிகளையும் கன்னியாகுமரி மாவட்ட விவசாயகள், வணிகர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் நுகர்வோர்கள் பயன்படுத்தி பயனடையலாம்.

Related Stories: