திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து கடந்த 12ம்தேதி அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க அரியானா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை கர்நாடக மாநிலம் கோலாரிலும், 2 பேரை அரியானாவிலும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை போன பணத்தில் ரூ.3 லட்சத்தை மட்டும் போலீசார் மீட்டனர். இந்த கொள்ளையில் மேலும் தகவல்கள் அறிய அரியானாவில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான முகமதுஆரிப், ஆஷாத் ஆகிய 2 பேரையும் கடந்த 22ம் தேதி திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் கொள்ளை சதிதிட்டம் தீட்டியது, கொள்ளையை அரங்கேற்றியது, பணத்தை வெளிமாநிலத்திற்கு கொண்டு சென்றது எப்படி? இதில் தொடர்புள்ள மற்ற குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரித்தனர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்ததையடுத்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

விசாரணையின்போது கொள்ளையடித்த பணத்தில் மீதியுள்ள ரூ.70 லட்சம் அரியானா மாநிலத்தில் பதுக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஒரு தனிப்படை போலீசார் அரியானாவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில் ஒரு தனிப்படை போலீசார் கோலார் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு லாட்ஜில் பதுங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த ேமலும் ஒரு குற்றவாளியை தனிப்படை போலீசார் இன்று காலை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் நிஜாம்(29) என தெரிய வந்துள்ளது. இவர் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதில் முக்கிய நபராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து நிஜாமை இன்றிரவு திருவண்ணாமலை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

Related Stories: