கேரளாவுக்கு கடத்த முயற்சி, 1,244 டெட்டனேட்டர், 622 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: 8 பேர் கும்பல் கைது

கோவை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1,244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 622 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 8 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை காரமடை காவல் நிலைய பகுதிகளில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 இரு சக்கர வாகனங்களில் கை பையுடன் வந்த 4 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள், திருச்சூரை சேர்ந்த தினேஷ் (23), ஆனந்த் (25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (41), திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பதும், கைப்பையை சோதனையிட்டபோது 26 கட்டுகளுடன் கூடிய மொத்தம் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் பழைய கட்டிடங்களை தகர்த்து கொடுக்கும் வேலை செய்து வரும் காரமடையை சேர்ந்த ரங்கராஜன் (46) என்பவரிடம் பணியாற்றி வருவதும், ரங்கராஜன் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு எவ்வித உரிமமும் இல்லாமல் வெடிபொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும், ரங்கராஜன் பயன்படுத்தியது போக மீதமுள்ள எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை சட்ட விரோதமாக கேரளாவிற்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து, ரங்கராஜனை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், அவரது வேலை நடந்து வரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 622 ஜெலட்டின் குச்சிகளும், 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வெடிபொருட்களை ரங்கராஜன் என்பவர் சிறுமுகை சேர்ந்த பெருமாள் (60), அன்னூரை சேர்ந்த கோபாலன் (58), காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் (58) ஆகியோரிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: