பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன் சீனாவிலும் பறந்தது: தடயவியல் ஆய்வில் உறுதி

அமிர்தசரஸ்: இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன், சீனாவிலும் பறந்திருப்பதாக தடயவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதி அமைந்துள்ளது. இது, கடுமையான நிலப்பரப்புகள் இன்றி மக்கள் அதிகம் வாழும் சமநில பகுதியாகும். இச்சூழலை பயன்படுத்தி ஆளில்லா விமானங்கள் மூலம் போதைப் பொருள், ஆயுதங்களை இந்திய பகுதிக்குள் கடத்துவது ெதாடர்ந்து நடந்து வருகிறது. பஞ்சாப் மாநில எல்லை பகுதியில் அத்துமீறியதாக கடந்தாண்டில் மட்டும் 22 ஆளில்லா விமானங்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் (பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்த விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி தகவல்களை சேகரிப்பதற்காக பிஎஸ்எப் சார்பில் தலைநகர் டெல்லியில் தடயவியல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்தின் ராஜாதால் சர்வதேச எல்லை பகுதியில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக கடந்த டிசம்பர் 25ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது அதிர்ச்சிகரமான தகவல் கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாபில் கடந்த டிசம்பர் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த ட்ரோன், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில் பறந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் 28 முறை பறந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: