குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு காலதாமதத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை; பொது அறிவு தாள் தேர்வு மதிப்பெண் மட்டும் ரேங்க் பட்டியலுக்கு எடுக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வு காலதாமதத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது. பொது அறிவு தாள் தேர்வு மதிப்பெண் மட்டும் ரேங்க் பட்டியலுக்கு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் வருகைப்பதிவேட்டில் உள்ள பதிவெண்ணும், வினாத்தாள் பதிவெண்ணும் மாறி இருந்ததால் குளறுபடி ஏற்பட் தேர்வு தாமதமாக நடந்தது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிக்கை: காலதாமதத்தை ஈடு செய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடந்து முடிந்தது. பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணிவரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது. முற்பகல் தேர்வு கட்டாய தமிழ் தகுதி தேர்வு என்பதால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும் இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்க கொள்ளப்பட மாட்டாது.

98 சதவீதத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத் தாட்கள் திருத்தும் போது கருத்தில் கொள்ளப்படும். பிற்பகல் தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் தாள்-2 பொது அறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சுமுகமாக நடந்து முடிந்தது. மேலும் இந்த தாள்-2ல் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகைப் பதிவேட்டிற்கும் இடையிலான வரிசை வேறுபாடே முற்பகல் தேர்வில் காலதாமதத்திற்கு காரணம். இந்த வேறுபாடு ஏற்படக் காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: