மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு வீரப்பூரில் வேடபரி கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நல்லாம் பிள்ளை ஊராட்சியில் வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயிலும், வீ.பூசாரிபட்டி அருகில் மந்திரம் காத்த மகாமுனி, பொன்னர், சங்கர், தங்காள், மாசி கருப்பண்ண சாமி உள்ளிட்ட கோயில்களும் உள்ளது. ஆண்டுதோறும் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோயில்களில் மாசி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கடந்த 20ம் தேதி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பொன்னர் தங்கைக்கு கிளி பிடித்து தந்த வரலாற்று நிகழ்வு” பொன்னி வளநாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அன்று இரவு அண்ணன்மார் தெய்வங்கள் போரிட்டு மாண்ட இடமான படுகளத்தில் உள்ள பொன்னர் சங்கர் கோயிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வேடபரி என்ற பொன்னர் குதிரை தேரில் அணியாப்பூர் சென்று அம்பு போடும் நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி வீரப்பூர், பொன்னி வளநாட்டில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சாம்புவான் காளையின் முதுகில் முரசு கட்டி கொட்டி கொண்டே முன்னே செல்ல அதைத் தொடர்ந்து வீரப்பூர் ஜமீன்தார், பரம்பரை அறங்காவலர்கள், மற்றும் பட்டையதாரர்கள் வந்தனர்.

தொடர்ந்து பட்டியூர் கிராமங்களின் இளைஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் கோயிலுக்குள் ஓடி சென்று குதிரை வாகனத்தில் பொன்னரை வைத்து தூக்கி வந்தனர். அதைத் தொடர்ந்து யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மன் பின்னே வர, அணியாப்பூரில் உள்ள குதிரை கோயிலுக்கு பொன்னர் அம்பு போட சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். வீரப்பூர் கோயில் முன்பிருந்து பெரிய தேரில் அம்மன் பவனி இன்று (28ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெற்றது. பின்னர் நாளை மாலை மஞ்சள் நீராடுதல் விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories: