காவேரிப்பாக்கம் அருகே மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்-விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டது பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நாளுக்குநாள் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் விபத்துகளும், உயிர் சேதமும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து ஆற்காடு நோக்கி தனியார் பஸ் நேற்று காலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். அவர்களை பஸ் கண்டக்டரோ, டிரைவரோ எச்சரிக்காத நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த மக்கள் அச்சமடைந்தனர்.மேலும், பஸ்சில் சென்ற மாணவர்களின் சாகச பயணத்தை பின்னால் வந்த வாகனஓட்டிகள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். காரில் சென்ற சிலர் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது குறித்தும் எச்சரிக்கை செய்துவிட்டு சென்றனர்.

ஆனாலும், பஸ் டிரைவர் அதை கண்டுகொள்ளாமல் வாலாஜா டோல்கேட் பகுதியை வந்தடைந்தார். பின்னர், மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி தங்களது கல்லூரிகளுக்கு சென்றனர்.

படியில் பயணம், நொடியில் மரணம் என எச்சரித்தும் மாணவர்களின் இதுபோன்ற செயல் பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, காவல் துறை மற்றும் பள்ளி மற்றும் நிர்வாகம் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: