ரேணிகுண்டா விமான நிலையம் அருகே செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

* ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

* பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்

திருப்பதி : ரேணிகுண்டா விமான நிலையம் அருகே உள்ள செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்தால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா விமான நிலையம் அருகே தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ கட்டுக்கடங்காமல் கரும்புகையுடன் கொழுந்து விட்டு எரிந்தது.

இதனை கண்ட ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து 5 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு  தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செல்போன் உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ரேணுகுண்டா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்வேறு தொழிற்சாலைகள், சர்வதேச விமான நிலையம் உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: