ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: காப்பு கட்டுடன் தொடங்கியது

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோயில்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வருடம் தோறும் மாசி மாதத்தில் நடக்கும் பொங்கல் வழிபாடு உலகப் பிரசித்தி பெற்றதாகும். ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள். 2 வருடங்களுக்குப் பிறகு வழக்கமான உற்சாகத்துடன் இந்த வருடம் பொங்கல் விழா நடக்கிறது. அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. 9வது நாளான மார்ச் 7ம் தேதி பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நடக்கிறது.

அன்று காலை 10.30 மணிக்கு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். தொடர்ந்து பல கிலோமீட்டர் சுற்றளவில் குவிந்திருக்கும் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடத் தொடங்குவார்கள். அன்று பிற்பகல் 2.30 மணிக்கு பொங்கல் பானைகளில் புனித நீர் தெளிக்கப்படும். அதைத் தொடர்ந்து தங்களது வேண்டுதலை ஆற்றுகால் பகவதி அம்மன் நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பெண்கள் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வார்கள். மறுநாள் 8ம் தேதி இரவு 9.15 மணி அளவில் குருதி தர்ப்பணத்துடன் பொங்கல் விழா நிறைவடையும்.

கடந்த 2 வருடமாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டதால் இந்த வருடம் 40 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட வருவார்கள் என்று ஆற்றுகால் கோயில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே பொங்கல் விழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் மார்ச் 6ம் தேதி மாலை முதல் 7ம் தேதி இரவு வரை மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: