மதுபான கொள்கை முறைகேடு வழக்கு டெல்லி துணை முதல்வர் சிசோடியா கைது: 8 மணி நேர விசாரணைக்கு பின் சிபிஐ அதிரடி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்  விசாரணைக்காக நேற்று ஆஜரான டெல்லி துணை முதல்வர் சிசோடியாவிடம் சிபிஐ 8 மணி  நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தியது. முக்கியமான கேள்விகளுக்கு அவர்  அளித்த  பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்றும், விசாரணைக்கு முறையாக  ஒத்துழைக்கவில்லை என்றும் கூறிய சிபிஐ, அவரை அதிரடியாக கைது செய்தது.  இதனால், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில்  மதுபான கடைகள், மதுபான பார்களை அரசே நடத்தி வருகிறது. இவற்றை தனியாரிடம்  ஒப்படைப்பதற்கு ஏற்ற வகையில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, 2021-22ம் ஆண்டு புதிய   மதுபான  கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியது.

இதன்மூலம், தங்களுக்கு  வேண்டிய  முக்கியமான தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களுக்கு இந்த மதுபான  உரிமங்களை வழங்குவதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும், மதுபான  கடைகள், மதுபான பார்களின் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள்  நடந்ததாகவும் பாஜ குற்றம்சாட்டியது. இந்த உரிமங்களை பெற்றவர்களுக்கு  அசாதாரணமான முறையில் தேவையற்ற வகையில் பல்வேறு சலுகைகளை வாரி  வழங்கியதாகவும், உரிமக் கட்டணத்தை தள்ளுபடி செய்தல், குறைத்தல் மற்றும்  அனுமதியின்றி எல்-1 உரிமத்தை நீட்டித்தது என பல்வேறு முறைகேடுகளில்  ஈடுபட்டதாகவும் பாஜ தெரிவித்தது.

இந்த முறைகேடுகள் பற்றி சிபிஐ விசாரணை  நடத்த உத்தரவிடும்படி டெல்லி ஆளுநரிடம் பாஜ மனுக்கள் அளித்தது. இதையடுத்து,  ஆளுநர் சக்சேனாவின் பரிந்துரையின் பேரில், இந்த முறைகேடு புகார் பற்றி  சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கலால் துறையை சேர்ந்த  அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.  இவர்களில் பலர்  ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்குகளின் அடிப்படையில், சட்ட  விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு  செய்து விசாரித்து வருகிறது. டெல்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியா,  கலால் துறையின் பொறுப்பையும் கவனித்து வருகிறார். அதனால், இந்த  முறைகேட்டின் முக்கிய  புள்ளியாக இவர் இருப்பதாக சிபிஐ.யும், அமலாக்கத்  துறையும் சந்தேகிக்கின்றன. குறிப்பாக, இந்த முறைகேட்டின் மூலம் கிடைத்த   பணத்தின் ஒரு பகுதியான ₹100 கோடியை, கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி  பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம்சாட்டியது.

இதையடுத்து, கடந்தாண்டு  அக்டோபர் 17ம் தேதி சிசோடியாவை அழைத்து சிபிஐ  முதல் முறையாக விசாரணை  நடத்தியது. பின்னர், அவருடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை  நடத்தியது. அவருடைய வங்கி லாக்கரையும் திறந்து சோதனையிட்டது. எனினும்,  ‘இந்த சோதனைகளில் சிபிஐ அதிகாரிகளால், முறைகேடு தொடர்பான எந்த ஆவணத்தையும்  கைப்பற்ற முடியவில்லை,’ என சிசோடியா தெரிவித்தார். அவருடைய இந்த  கருத்துக்கு சிபிஐ அதிகாரிகளும் இதுவரையில் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த  வழக்கில் தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான  சந்திரசேகர ராவின் மகளான கவிதா மீதும் சிபிஐ.யும், அமலாக்கத் துறையும்  வழக்குப் பதிவு செய்துள்ளன. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த எம்பி.க்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள் பலர் ஏற்கனவே   கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் சிசோடியா நேற்று ஆஜரானார்.  முன்னதாக,   விசாரணைக்காக சிசோடியா நேற்று தனது இல்லத்தை விட்டு புறப்பட்டபோது, ஆம்  ஆத்மி கட்சியினர் தங்கள் ஆதரவை தெரிவிக்க திரளாக அங்கு கூடினர். வீட்டில்  இருந்து ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சிசோடியா ஊர்வலமாக  சென்று சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு  சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார்.  அங்கு, சிபிஐ.யை கண்டித்து போராட்டம்  நடத்திய ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிபிஐ  அலுவலகத்துக்குள் காலை 11.12 மணிக்கு சிசோடியா நுழைந்தார். அவரிடம் சிபிஐ  அதிகாரிகள் தொடர்ச்சியாக 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

2021-2022 மதுபான  கொள்கையின் அம்சங்கள், இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தனது  நண்பரான தினேஷ் அரோராவுடன் உள்ள தொடர்பு,  மதுபான கடைகள், பார்கள்  ஒதுக்கீடு தொடர்பாக  நடந்த பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் உள்ளிட்டவை  குறித்து சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி கேள்விகள் கேட்டனர். இவற்றில்  பல கேள்விகளுக்கு சிசோடியா மழுப்பலான பதில்கள் அளித்ததாகவும், பல  கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்ததாகவும் சிபிஐ அதிகாரிகள்  குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு  அளிக்கவில்லை என்றும், முக்கிய தகவல்களுக்கு விளக்கங்கள் அளிக்கவில்லை  என்றும் கூறி, 8 மணி நேரத்துக்கு பிறகு மாலை 7.15 மணிக்கு அவரை கைது செய்வதாக சிபிஐ அதிகாரிகள்  அறிவித்தனர். அதற்கான கைது வாரன்ட்டை சிசோடியாவிடம் அளித்தனர். இதனால்,  டெல்லி அரசியல் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பெரும் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. சிசோடியாவின் கைதுக்கு ஆம் ஆத்மியும்,  பல்வேறு  எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    

* 8 மாதங்கள் வர மாட்டேன் புறப்படும் போதே கணிப்பு

நேற்று  சிபிஐ அலுவலகத்துக்கு செல்லும் முன்பாக சிசோடியா அளித்த பேட்டியில்,  ‘‘இன்று நான் கைது செய்யப்படலாம். 7-8 மாதங்களுக்கு நான் திரும்பி வரப்  போவதில்லை. நான் சிறைக்கு செல்வதற்கு பயப்படவில்லை.  நான் பத்திரிகையாளர்  வேலையை ராஜினாமா செய்தபோது என் மனைவி எனக்கு ஆதரவளித்தார். இன்றும், எனது  குடும்பம் எனக்கு ஆதரவாக நிற்கிறது. நான் கைது செய்யப்பட்டால், எனது  தொண்டர்கள் என் குடும்பத்தை கவனித்துக் கொள்வார்கள்,’’ என்றார். அதேபோல்,  முதல்வர் கெஜ்ரிவால் அளித்த பேட்டியிலும், சிசோடியா கைது செய்யப்பட  இருப்பதாக  காலையிலேயே தெரிவித்தார். அவர்கள் கூறியது போலவே, நேற்று மாலை  கைது படலம் அரங்கேறியது.

Related Stories: