தாய்லாந்து, இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: ஏர்லைன்ஸ் ஊழியர் உள்பட 5 பேர் கைது

மீனம்பாக்கம்: தாய்லாந்து, இலங்கையில் இருந்து விமானங்கள் மூலமாக சென்னை விமானநிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடத்தலுக்கு உதவிய ஏர்லைன்ஸ் ஊழியர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் மூலமாக பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக நேற்று விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விமானப் பயணிகளின் வருகை பகுதியில் தனிப்படை அமைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அதில், சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி, அவர்களின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், சென்னையை சேர்ந்த 2 பயணிகள்மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்ததில், அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்திருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கொழும்பில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த 2 ஆண் பயணிகள்மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியறையில் வைத்து சோதனை செய்தபோது, அவர்களின் உள்ளாடைகளுக்குள் மறைத்து கடத்தி வந்திருந்த பார்சல்களில் தங்கப் பசை இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் தாய்லாந்து, இலங்கை விமானங்களில் கடத்தி வரப்பட்ட 1.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பயணிகளை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே, சென்னை சர்வதேச விமானநிலைய புறப்பாடு பகுதியில் இருந்து வெளியேற முயன்ற ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியரின்மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரது ஆடைகள் மற்றும் கைப்பையில் இருந்து 2.50 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்ததில், வெளிநாட்டில் இருந்து வந்த கடத்தல் ஆசாமிகளுக்கு உதவும் நோக்கில், அவர்கள் கடத்தி வந்த தங்கக் கட்டிகளை விமானநிலைய புறப்பாடு பகுதி வழியாக வெளியே கொண்டுவர ஏர் இந்தியா நிறுவன ஊழியர் முயற்சித்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவன ஊழியரை கைது செய்து, எந்த விமானத்தில் வந்த கடத்தல் ஆசாமியிடம் இருந்து தங்கத்தை பெற்றார்? இவர் எவ்வளவு நாளாக இதேபோல் கடத்தல் ஆசாமிகளுக்கு துணையாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கறுப்பு ஆடாக செயல்பட்டு வந்துள்ளார் என பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக, நேற்று ஒரே நாளில் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், இலங்கை, தாய்லாந்து பயணிகள் மற்றும் கடத்தலுக்கு துணைபோன ஏர் இந்தியா நிறுவன ஊழியர் ஆகியோரிடம் ரூ.2 கோடி மதிப்பில் 4 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஏர் இந்தியா ஊழியர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: