ஊத்தங்கரை கோயிலில் கொள்ளையடித்த ஐம்பொன் சிலைகளை மீண்டும் வந்து போட்டு சென்ற கும்பல்: தண்ணீர் தொட்டியில் கிடந்தவைகளை மீட்டு பூஜை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே வாசுதேவ கண்ணன் கோயிலில், கடந்த 19ம் தேதி கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை, நேற்று முன்தினம் இரவு கோயில் முன் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்றுப்படுகையில், தேசிய நெடுஞ்சாலையோரம் வாசுதேவ கண்ணன் பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 19ம் தேதி இரவு, இந்த கோயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கருவறையில் இருந்த உற்சவ மூர்த்திகள் வாசுதேவ கண்ணன், ராதா-ருக்மணி, ராமானுஜர், சுதர்சன ஆழ்வார் ஆகிய ஒன்றரை அடி கொண்ட 5 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹாட் டிஸ்க்கையும் கையோடு எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், எஸ்ஐ.,க்கள் குட்டியப்பன், அன்பழகன் ஆகியோர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், வாசுதேவ கண்ணன் கோயில் முன் உள்ள சின்டெக்ஸ் தொட்டியின் மேல் பகுதி மற்றும் சில இடங்களில் துளையிடப்பட்டு, அதில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டிருந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்ற மக்கள், தொட்டியில் பார்த்தபோது அதற்குள் கொள்ளை போன 5 ஐம்பொன் சிலைகள் கிடந்தன. இதையறிந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். பின்னர், தொட்டியில் கிடந்த 5 சிலைகளையும் வெளியே எடுத்து, பூஜை செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் மீண்டும் அங்கு வந்து சிலைகளை போட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, அவர்கள் சிலைகளை போட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: