தமிழ்நாடு- ஆந்திர எல்லையில் உள்ள சத்தியவேடு சாலையில் புதிய பாலம் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சத்தியவேடு சாலையில், தமிழ்நாடு-ஆந்திராவை இணைக்கும் பாலம் கடந்த 1954ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் பகுதிகளில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சத்தியவேடு,  தடா,  சூளூர்பேட்டை, நாயுடுபேட்டை மற்றும் காளஹஸ்தி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆந்திர மாநிலம் தடா அருகில் தமிழகத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது போல் ஆந்திராவில் சிட்டி என்ற தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் வேலைக்கு செல்கிறார்கள். இந்த சிட்டியில் உள்ள கம்பெனிகளுக்கு  கனரக வாகனங்களில் இரும்பு உள்ளிட்ட உதிரி பாகங்களை ஏற்றி செல்வார்கள்.

மேலும் ஆந்திர மாநிலத்தில்  இருந்து தமிழகத்துக்கு கிராவல் மற்றும் சவுடு மண்  லாரிகள் மூலம் செல்கிறது. கனரக வாகனங்கள் செல்வதால் ஊத்துக்கோட்டை சத்தியவேடு  பகுதியை இணைக்கும் பாலம் வலுவிழந்துள்ளது. எனவே,  69 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;

தமிழ்நாடு, ஆந்திராவை இணைக்கும் பாலம் ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலையில் உள்ளது. இந்த பாலம் கட்டி சுமார் 69  ஆண்டுகள்  ஆகிறது. இதனால் இந்த பாலம் எப்போது விழுந்து விடுமோ என்று தெரியவில்லை. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மேற்கண்ட பகுதிகளில் புதிய பாலம் கட்ட வேண்டும்’ என்றனர்.

Related Stories: