தாய்- குழந்தையை 3 கி.மீட்டர் டோலி கட்டி தூக்கி சென்ற கொடுமை சாலை வசதியில்லாததால் 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலி

*ஆந்திராவில் பரிதாபம்

திருமலை : ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டத்தில்  உள்ள கிராமப்புறங்களும் பல துறைகளில் முன்னேறி வருகின்றன.  ஆனால், பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி பகுதிகளின் வளர்ச்சி பணிகள் மட்டும்  வார்த்தைகளாக மட்டுமே சொல்லப்பட்டு வருகிறது. ரோலுகுண்டா மண்டலத்தில் உள்ள பழங்குடியின  கிராமங்களில் இன்றும் சாலை வசதியின்றி பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.  குறைந்தபட்ச சாலை வசதி இருந்தால் கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கும் என பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ரோலுகுண்டா அடுத்த பெத்தாகருவு கிராமத்தை சேர்ந்தவர்  கமலா. இவருக்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்தது.  மலை பகுதியிலேயே குழந்தை  பெற்றெடுத்த நிலையில்  கமலாவின் குழந்தை உடல்நிலை சரியில்லாததால் தாய் மறறும் குழந்தையை சுமார் 3 கி.மீட்டர் தூரம் டோலி கட்டி சிரமப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது.

உரிய நேரத்தில் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும். தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கிருந்து வருவதற்குள் குழந்தை சிகிச்சயின்றி உயிரிழந்ததாக குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.  மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் நேரத்தில்   வாக்குறுதிகள் அளிப்பதாகவும், பின்னர் அதனை காற்றில் பறக்க விட்டு விடுகின்றனர் எனவும் பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேபோல், அல்லூரி சீத்தாராமராஜூ மாவட்டம், ஹூக்கும்பேட்டை அடுத்த திகலாகோலை மலைப்பகுதியில் பானு என்ற கர்ப்பிணிக்கு பிரசவலி ஏற்பட்டது.  உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். அப்போது ஆம்புலன்ஸ் வெளியே சென்று இருப்பதாகவும், பொறுமையாக காத்திருந்தால் அனுப்புவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் வாகனம் வராத நிலையில் குழந்தை வயிற்றில் திசை மாறியதால் 2 கி.மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி சென்றனர். பின்னர்,  ஆட்டோவில் ஹூக்கும்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குள் குழந்தை இறந்த நிலையில்,  குழந்தையை வெளியே எடுத்தனர். சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் இந்த சம்பவம் நடந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: