கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்றபின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ‘epass.tnega.org’ என்ற இணையதள முகவரியில் இ-பாஸ் பெறலாம். மே30ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குக் கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுோறும் அதிகரித்து வருகிறது. இது அந்த மலைப்பிரதேசங்களின் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி அதனை கட்டுப்படுத்த, கொரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும். அதற்கான இணையப் பக்கத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. அதில் பச்சை, ஊதா, நீலம் என மூன்று நிறங்களைக் கொண்ட கோடுகளுடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதைப் பெற்றால் மட்டுமே வாகனங்கள் இந்த இடங்களுக்குள் செல்ல அனுமதியளிக்கப்படும். இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு மே 5-ஆம் தேதி வெளியிட்டது.

இ-பாஸ் பதிவிற்காக உள்ளே சென்றவுடன் உள்ளூர் ஆட்களுக்கான (Localite pass) இ-பாஸ், முந்தைய பாஸ்கள் (Previous Passes) என்ற இரண்டு தெரிவுகள் இருக்கும். அதில் உள்ளூர் மக்கள் உரிய ஆவணங்களைப் பதிவுச் செய்து இ-பாஸ் பெறலாம். முன்பே இ-பாஸ் பெறப் பதிவு செய்திருந்தால் முந்தைய இ-பாஸ் என்ற தேர்வில் சென்று பதிவு செய்த இ-பாஸைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இணையப் பக்கம் தானியங்கி முறையில் இ-பாஸ் வழங்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. எனவே, நீங்கள் இணையப் பக்கத்தில் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்தவுடன் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

 

The post கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: