சம்பா, தாளடி அறுவடைக்கு பின் வைக்கோல் கட்டுகள் உடனுக்குடன் விற்பனை-கட்டு ரூ.100 வரை விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடைக்கு பின்பு வைக்கோல் கட்டுகள் உடனுக்குடன் விற்பனையாகவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது ஒரு கட்டு ரூ.100 வரையிலும் விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவி்த்தனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சம்பா அறுவடைப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இயந்திரங்களை கொண்டு அறுவடை முடித்து பின்னர் வைக்கோல்களை சுருள் வடிவில் இயந்திரங்கள் வாயிலாக சுருட்டி கட்டப்படுகிறது. இப்படி கட்டப்படும் வைக்கோல்கள் சுருள்கள் பிற மாவட்ட பகுதிகளுக்கு அனுப்பும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

கடந்தாண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி முடித்து விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியை மும்முரமாக மேற்கொண்டனர். கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டது.பல்வேறு இயற்கை இடர்பாடுகளை விவசாயிகள் சந்தித்து தற்போது நெல் அறுவடைப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பிற மாவட்டங்களில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோலை ஒன்று சேர்த்து பாய்போல் சுருட்டும் இயந்திரங்களும் வந்துள்ளன. இப்படி சுருள் வடிவில் வைக்கோல் சுருட்டப்பட்டு கட்டப்படுகிறது.

தொடர்ந்து பிற மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் வாகனங்கள் வாயிலாக வைகோல்கள் அனுப்பப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் வைக்கோல் சுருள் வடிவில் கட்டப்பட்டு லாரிகள், லோடு வேன் ஆகியவற்றில் ஏற்றி அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் மும்மரமாக நடைபெற்று வைக்கோல் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் அனைவரிடமும் கால்நடைகள் அதிக அளவில் இருந்தது.அந்த சமயத்தில் வைகோல்களின் பற்றாக்குறை அதிக அளவில் இருந்தது. ஆனால் தற்போது விவசாயிகளிடம் கால்நடைகள் குறைந்து விட்டது. சென்ற ஆண்டு ரூ. 60 முதல் 75க்கு விற்பனையான ஒரு கட்டு வைக்கோல் தற்போது ரூ. 100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

அறுவடை பணிகள் நடைபெறும் போது மொத்த விற்பனையாளர்கள் விவசாயிகளை தொடர்பு கொண்டு வைகோல்களை ஏற்றி செல்கின்றனர்.அறுவடைக்குப் பின்பு வைக்கோல்கள் உடனுக்குடன் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் லோடு வாகனங்களில் வைக்கோல் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: