திருவண்ணாமலையில் ₹3.45 கோடியில் பிடிஓ அலுவலக கட்டுமான பணி

* கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு

* உழவர் சந்தையை பார்வையிட்டார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ₹3.45 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்படும் பிடிஓ அலுவலக கட்டுமான பணிகளையும், உழவர் சந்தையையும் கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேற்று கலெக்டர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அதையொட்டி, திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் புதிதாக ₹3.45 கோடி மதிப்பில் கட்டப்படும் பிடிஓ அலுவலக கட்டுமான பணியை அவர் பார்வையிட்டார்.

அப்போது, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பணிகள் தரமாக அமைய வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து, அதே பகுதியில் செயல்படும் உழவர் சந்தையை பார்வையிட்டார்.

காய்கறிகளின் விலை நிலவரம், விவசாயிகளின் வருகை, விற்பனை விபரம், பொதுமக்களின் வருகை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் இங்கு காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்யும் வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, கிராமங்களில் இருந்து காய்கறிகளை டவுன் பஸ்சில் கொண்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட டவுன் பஸ்கள் உழவர் சந்தை வரை வந்து இறக்கிவிட்டு சென்றால் உதவியாக இருக்கும் எனவும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

மேலும், காய்கறிகளை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன கிடங்கு வசதிையயும் அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் இருந்து உழவர் சந்தைக்கு செல்லும் பாதையில் குப்பை குவிந்து கிடப்பதை உடனடியாக அகற்ற வேண்டும், உழவர் சந்தையின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றார்.

பின்னர், நொச்சிமலை, சோ.கீழ்நாச்சிப்பட்டு, மேலத்திக்கான, நல்லவன்பாளையம், மேல்செட்டிப்பட்டு, விஸ்வந்தாங்கல், கீழ்நாச்சிப்பட்டு, நாச்சானந்தல் ஆகிய கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சித்திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, மேல் செட்டிப்பட்டு பகுதியில் பள்ளி வகுப்பறை கட்டுமான பணியை பார்வையிட்ட கலெக்டர், அதன் அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு திடீரென சென்றார். அங்கு, டாக்டர் பணியில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.ஆய்வின்போது, ஆர்டிஓ மந்தாகினி, திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், மரியதேவ்ஆனந்த், தாசில்தார் சரளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: