அண்ணாமலைக்கு கவர்னராக ஆசை: கே.பாலகிருஷ்ணன் தாக்கு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு மரப்பாலம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது: தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகள் ஆண்ட அதிமுக அரசு ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வட்டி செலுத்த வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுபோது கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. மக்களுக்கான தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில், ரூ.4,000 நிவாரணம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000, கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி என பல திட்டங்களை அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டத்தை 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி விடுவார். அதே வேளையில், தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல திட்டங்களையும் தமிழக முதல்வர் செயல்படுத்தி உள்ளார். அதை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார். அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொரோனா பரவல் என பல சம்பவங்களை திறமையாக கையாளவில்லை.

பாஜ தலைவர் அண்ணாமலை அவசர கோலத்தில் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார். அண்ணாமலை கவர்னராக விருப்பப்படுகின்றார். அதனால் தான் தொடர்ந்து ஏதாவது ஒரு குற்றச்சாட்டுகளை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். வருகின்ற பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள், தேர்தல் நேர வாக்குறுதி தொடர்பான அறிவிப்புகள் வர உள்ளது. எனவே ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

Related Stories: