கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏர்ரஅள்ளி பகுதியில் நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் பலியானார்கள்.

தருமபுரி மாவட்டம் நூலகள்ளி தாலுகா சவுலுர் கிராமத்தை சேர்ந்த 12 பேர் கற்றாழை நார் தயாரிக்கும் பணிக்காக இன்று அதிகாலை டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த ஏர்ரஅள்ளி கிராமம் அருகே சென்றபோது சிவகாசியில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென டிராக்டர் மீது மோதியது.

இதில் டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த முத்து (20), மல்லி (60), முனுசாமி (50), வசந்தி (45), 3 மாத குழந்தை வர்ஷினி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட துணை கண்காணிப்பாளர் தமிழரசி மற்றும் காவேரிப்பட்டினம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் முத்து என்பவரை கைது செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: