நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மோடி புத்தகம் கட்டாயம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ‘தேர்வு வாரியர்ஸ்’ புத்தகத்தை பள்ளி நூலகங்களில் இடம் பெறச் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகள் அடங்கிய புத்தகம் ‘தேர்வு வாரியர்ஸ்’  என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அனைத்து பள்ளி நூலகங்களில் கிடைக்கச் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து மாநில முதல்வர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’  ‘சமாக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியின் நூலகங்களிலும் ‘தேர்வு வாரியர்ஸ்’ புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்  பிரதமரின் அறிவுரைகளை பெற்று பயன் அடைவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த புத்தகத்தை தமிழ், தெலுங்கு, அசாமியா,  பங்களா, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி,  உருது ஆகிய 11 இந்திய மொழிகளில்  நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.

Related Stories: