சிவசேனா கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணைய முடிவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: ஏக்நாத் ஷிண்டேவுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: சிவசேனா கட்சி, சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உத்தரவ் தாக்கரே தாக்கல் செய்த வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக எதிர்மனுதாரரான ஏக்நாத் ஷிண்டே இரண்டு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தின. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்து. பாஜ ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதனையடுத்து சிவசேனா கட்சியின் கொடி மற்றும் சின்னம் தங்களுக்கு சொந்தம் என இரு குழுக்களும் தனித்தனியே இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியது. ஏக்நாத் ஷிண்டே அணியை சிவசேனாவாக அங்கீகரிப்பதாகவும், அவர்களுக்கு வில் அம்பு சின்னத்தை வழங்குவதாகவும் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இந்த நிலையில்  தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில்,‘‘தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும் அதற்கான அவசியமும் கிடையாது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர் தரப்பினரான ஏக்நாத் ஷிண்டே இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: