புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்என் சுக்லா மீது சிபிஐ திடீர் வழக்குப்பதிவு செய்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் எஸ்என் சுக்லா. இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் ஓய்வு பெற்றார். இந்தநிலையில் அவர் 2014 முதல் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக அவரும், அவரது மனைவி பெயரிலும் ரூ.2.45 கோடி சொத்து குவித்தது தொடர்பாக சிபிஐ நேற்று திடீரென வழக்குப்பதிவு செய்துள்ளது. இது சுக்லா மீதான 2வது வழக்கு. அவர் பதவியில் இருக்கும் போதே 2019ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி லக்னோ மருத்துவ கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்ட வழக்கில் லஞ்சம் வாங்கியதாக முதல் வழக்குப்பதிவு செய்தது. அவரை பணி நீக்கம் செய்ய 2018ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவும், அவரை தொடர்ந்து வந்த ரஞ்சன் கோகாயும் முயன்றனர். ஆனால் நடக்கவில்லை. அவர் 2020ல் ஓய்வு பெற்றார். தற்போது புதிய வழக்கு சுக்லா மீது பதியப்பட்டுள்ளது.
