விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரம்: 6 வாரத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.!

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரத்தில் ஆறு வார காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி இல்ல ஆதரவற்றோர் மற்றும் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பல புகார்கள் வெளியாகின. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஜபருல்லாவை காணவில்லை என அவரது மகன் அண்மையில் புகார் கொடுக்க காப்பகத்தினர் சரியான பதில் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஜபருல்லாவை மீட்டுத் தரக் கோரி நீதிமன்றத்தில் அவரது மகன் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார். அதன்படி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது. ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி உட்பட ஒன்பது பேரை கெடார் காவல் நிலைய போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

தொடர்ந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், இந்த வழக்கை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கின் விவரங்கள் அனைத்தையும் பெற்று அவர்கள் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பாக  ஆறு வார காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: