ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது

சென்னை: கார்ல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்ததாக  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீனதயாள் உபாத்யாயா எழுதிய 2 புத்தகங்களின் தமிழாக்கமான சிந்தனை சிதறல்கள் மற்றும் ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய புத்தகங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியா சாதி, இனம் என பிளவுப்பட்டுள்ளது. கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை நிலை ஆகியவற்றை ஒழிக்க முடியவில்லை. இதற்கெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய மனநிலையை பின்பற்றுவதே காரணமாகும்.

75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கும் அதுவே காரணம். கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது. மார்க்ஸின் தத்துவம் இன்று புறந்தள்ளப்பட்டுள்ளது. நம் நாட்டில் சிந்தனையாளர்களே இல்லாதது போல பேராசிரியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க நலனுக்காக ஜனநாயகத்தை ஆதரித்தார் என்று கூறுகின்றனர். பெண்களுக்கான ஓட்டு உரிமையை ஆபிரகாம் லிங்கன் வழங்க மறுத்தார். அவரை ஜனநாயகத்திற்கான உதாரணமாக காட்டுகிறோம் இது தவறான முன்னுதாரணம்.

காலனி ஆதிக்க மனநிலையை முதலில் புறந்தள்ளுங்கள். 25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும். இந்தியாவின் பிரச்னைகளை தனிப்பட்ட பிரச்னையாக பார்க்க கூடாது, அதனை ஒருங்கிணைந்து நாம் எதிர்கொள்ள வேண்டும். பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. ஆனால் தீர்வு இந்தியாவிடம் உள்ளது. மொழி, இனம் ஆகியவற்றை வைத்து மக்களை பிரிக்க முடியாது. மக்கள் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். பல நாடுகள் இந்தியாவிலிருந்து செல்பவர்களுக்கு அந்த நாட்டிற்கு சென்று இறங்கிய பின்னர் விசா வழங்கும் நடைமுறையை பின்பற்றுகின்றன. இது இந்தியாவின் வளர்ச்சியையும் வலிமையையும் எடுத்துரைக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: