முக்கிய பங்குதாரர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில்ரூ.800 கோடி மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிறுவன பங்குதாரர் தற்கொலை: சென்னையில் பரபரப்பு

சென்னை: ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்ரூ.15 ஆயிரம் வட்டி தருவதாக கூறிரூ.800 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன பங்குதாரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை முகப்பேரில் ஹிஜாவு என்ற நிதி நிறுனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரு விளம்பரம் செய்தது. அதில் மலேசியாவில் உள்ள தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 15 ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்து இருந்தது. இதை நம்பி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்ரூ.800 கோடிக்கு மேல், இந்த ஆயில் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதன்படி,ரூ.800 கோடி ரூபாயை அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்ததோடு, ஆரம்பத்தில் சிலருக்கு வட்டி கொடுத்தனர்.

பின்னர் கடந்த 5 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு மாதம் 15,000 ரூபாயை தரவில்லை. இதுபற்றி பணம் கொடுத்தவர்கள் கேட்டபோது, முறையாக பதிலளிக்காமல் இருந்துள்னர். இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, அந்நிறுவன நிர்வாகிகள் தலைமறைவாகினர். இதையடுத்து, அந்நிறுவனத்தின் பங்குதாரர்களான சவுந்திரராஜன், அலெக்சாண்டர் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்த நேரு (47) உள்பட 3 பேரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 14ம் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நேரு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள சவுந்திரராஜன், அலெக்சாண்டர் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இதனால் அவர்கள் இருவரையும் தலைமறைவு குற்றவாளிகள் என்று பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அறிவித்தனர். இந்தநிலையில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சவுந்திரராஜன் நேற்று நீதிமன்றத்தில் சுரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரான நேரு, பிறகு வீட்டிற்கு வந்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த மனைவி மற்றும் குழந்தைகள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை பார்த்தபோது இறந்தது தெரிந்தது. தகவலறிந்த தண்டையார்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, நேருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளி சரணடைந்த நிலையில், மற்றொரு முக்கிய குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

* சென்னை முகப்பேரில் ஹிஜாவு நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

* ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 15 ஆயிரம் ரூபாய்  தருவதாக விளம்பரம் செய்தது.

* ஆரம்பத்தில் சிலருக்கு வட்டி கொடுத்தனர். பின்னர் கடந்த 5 மாதங்களாக  வாடிக்கையாளர்களுக்கு எதுவும் தரவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்  அளித்தனர்.

* இதை நம்பி தமிழகம் முழுவதும் பல்வேறு  மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்ரூ.800 கோடிக்கு  மேல், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

Related Stories: