டூ வீலரில் அதிவேகமாக சென்றதை தட்டி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு: போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்: திருப்பருத்திகுன்றத்தில் டூ வீலரில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய இளைஞரை கிராமமக்கள் தாக்கியதில் படுகாயத்துடன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (53). இவர், காஞ்சிபுரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர் அதிவேகமாக டூ வீலரில் சென்றுள்ளார். எனவே, டூ வீலரில் அதிவேகமாக சென்ற சஞ்சய் வீட்டுக்கு சென்று ராஜா, வாகனத்தை ஏன் அதிவேகமாக ஓட்டி வந்தாய் என தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சஞ்சய் வீட்டிலிருந்த அருவாளை எடுத்து வந்து ராஜாவை வெட்டியுள்ளார். இதனால், பலத்த காயமடைந்த ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராமமக்கள் சஞ்சயை சரமாரியாக தாக்கினர். இதனால், சஞ்சையும் படுகாயம் அடைந்தார். பின்னர், இருவரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: