கடமலை - மயிலை ஒன்றியத்தில் கொள்முதல் விலை குறைவால் வற்றலாக மாறும் மிளகாய்-விவசாயிகள் தீவிர நடவடிக்கை

வருசநாடு : கடமலை - மயிலை ஒன்றியத்தில் உற்பத்தியாகும் மிளகாயின் கொள்முதல் விலை குறைந்துள்ளது. இதனால் அவற்றை செடிகளிலேயே பழுக்கவிட்டு களங்களில் உலர்த்தி வற்றலாக மாற்றும் பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.கடமலை - மயிலை ஒன்றியத்தில் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். இதில் சம்பா மிளகாய், மோட்டா மிளகாய், புல்லட் மிளகாய் என மூன்று வகைகளை அவர்கள் விவசாயிகள் தீவிரமாக சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மிளகாயின் கொள்முதல் விலை மிகவும் குறைந்துள்ளதால் விவசாயிகள் மிளகாய்களை பழமாக்கி களங்களிலும் உலர்த்தும் பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்கள். இதனால் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மிளகாய்களை சந்தைக்கு அனுப்பாமல் தங்களுடைய தோட்டங்களில் உலர்த்தி பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மிளகாய் கொள்முதல் விலை தற்பொழுது மிகவும் குறைந்து விட்டது. எனவே மிளகாய் செடிகளில் உள்ள காய்களை வற்றல் போடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் தற்போது ஒரு கிலோ மிளகாய் விலை ரூ.30 முதல் 35 வரை போய்க்கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் இல்லாமல் மிகவும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மிளகாய்களை செடிகளிலேயே பழுக்கவிட்டு அவற்றை பறித்து களங்களில் உலர்த்தி வருகிறோம் என்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விவசாயிகளுக்கு ஏற்கனவே பலமுறை மிளகாய் சாகுபடி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

மிளகாய்களை பதப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம். இதை விவசாயிகள் கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாக இதுபோன்ற இழப்புகள் ஏற்படுகிறது என்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிளகாய் மிகவும் குறைவாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. தற்பொழுது விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே இனி மிளகாய் அதிகளவில் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Related Stories: