மாநிலங்களவையில் ஒழுங்கீனம் 12 எம்பிக்களிடம் விசாரணை: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உத்தரவு

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒழுங்கீனமாக நடந்து அவை நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்திய 12 எம்பிக்களிடம் விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைக்கும்படி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் விவாதம் நடந்த போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் பலமுறை இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.13 ம் தேதி முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த கட்ட தொடர் மார்ச் 13ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த நிலையில் முதற்கட்ட தொடரில் அவை விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்த 12 எம்பிக்களிடம் விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைக்கும்படி துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அவையின் மையப்பகுதிக்கு அடிக்கடி வந்து முழக்கங்களை எழுப்பி அவை நடவடிக்கைகளைத் தடுத்ததால் சிறப்புரிமையை மீறிய கூறி அவர்கள் மீது விசாரிக்க இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.  

இந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள்  சக்திசிங் கோஹில், நரன்பாய் ஜே ரத்வா, சையத் நசீர் உசைன், குமார் கேட்கர், இம்ரான் பிரதாப்கர்கி, எல். அனுமந்தையா, பூலோ தேவி நேதம், ஜெபி மாதர் ஹிஷாம், ரஞ்சீத் ரஞ்சன் ஆகிய 9 பேரும், ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்சய் சிங், சுஷில் குமார் குப்தா, சந்தீப் குமார் பதக் ஆகிய 3 பேர் மீது  ஒழுங்கீனமான நடத்தையால் எழும் சிறப்புரிமை மீறல் தொடர்பாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் விதி எண் 267ன் கீழ் ஒரே நோட்டீசை திரும்ப திரும்ப விவாதிக்க அளித்துள்ளார். அவர் மீது நடத்தை விதி 203ன் கீழ் தனியாக விசாரிக்கப்படும் என்று மாநிலங்களவை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.

Related Stories: