இலவச வீட்டுத் திட்டத்தில் ஊழல் பினராய் விஜயனின் முன்னாள் செயலருக்கு காவல் நீட்டிப்பு

திருவனந்தபுரம்: ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் லைப் மிஷன் என்ற திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்படி பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.  இந்தக் குடியிருப்பை கட்டுவதற்காக துபாயை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ரூ.19 கோடி நன்கொடையாக வழங்கியது. இந்தப் பணத்திலிருந்து கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு ரூ.4.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க  எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணைக்குப் பின் நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை சார்பில், ‘லைப் மிஷன் ஊழலில் சிவசங்கரின் பங்கு எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுக்கிறார். எனவே மேலும் 4 நாள் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சிவசங்கரை மேலும் 4 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.

Related Stories: