ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி-அம்பாள் தேரோட்டம் கோலாகலம்

ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் நேற்று, ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முழுவதும் நடை திறக்கப்பட்டு விடிய, விடிய ராமநாதசுவாமிக்கு கங்கை நீரால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. 2ம் பிரகாரத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பால், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இரவு 9 மணிக்கு மேல் ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளினர். சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தனுஷ்கோடி சாலையிலுள்ள ஜடாமகுட தீர்த்த சிவன் கோயில், தனுஷ்கோடி சிவலிங்கம், லெட்சுமண தீர்த்த சிவன் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் இரவு முழுவதும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். திருவிழாவின் 9ம் நாளான நேற்று அதிகாலை சுவாமி, அம்பாள் சன்னதிகளில் கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் சர்வ அலங்காரத்தில் திருத்தேர்களில் எழுந்தருளினர்.

கிழக்கு ரத வீதியில் சுவாமி - அம்பாள் தேர்களின் வடம் பிடித்து கோயில் துணை கமிஷனர் மாரியப்பன் தேரோட்டத்தை துவக்கி வைக்க ஏராளமான பக்தர்கள் ‘சிவ... சிவா’ கோஷங்கள் முழங்கியபடி தேரை இழுத்து வந்தனர். விநாயகர், முருகன் தேர்கள் முன்னால் செல்ல சுவாமி - அம்பாள் தேர்கள் ரத வீதியில் வலம் வந்தன. 11.30 மணிக்கு மேல் தேர்கள் தேரடி நிலையை வந்தடைந்ததை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி - அம்பாள் தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளினர்.

Related Stories: