பெரம்பூர் நகைக்கடை கொள்ளை 600 செல்போன் எண்கள், சிசிடிவி பதிவுகள் மீண்டும் ஆய்வு: அதிரடி நடவடிக்கையில் போலீசார்

சென்னை: பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் திருடு போன விவகாரத்தில், மீண்டும் அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஆராயும் போலீசார், 600 செல்போன் எண்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஜேஎல் கோல்ட் பேலஸ் என்ற நகைக்கடையில், கடந்த 9ம் தேதி இரவு மர்ம நபர்கள் ஷட்டரை வெல்டிங் மெஷினால் ஓட்டை போட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை அள்ளி சென்றனர். இதுகுறித்து திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க 3 உதவி ஆணையர் தலைமையில் மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் பதிவு எண் போலியானது என தெரிய வந்தது. இதேபோன்று கேஸ் வெல்டிங் மெஷின் வைத்துள்ளவர்கள் மற்றும் நகை கடையில் வேலை பார்த்தவர்கள் என பலரை இதுவரை விசாரணை செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சந்தேகப்படும் படியாக 600 செல்போன் எண்களை எடுத்து அதில் 450க்கும் மேற்பட்ட எண்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த இடம் மட்டும் அல்லாமல் தற்போது பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா  பதிவுகளையும்  மீண்டும் தூசி தட்டி முழுவதுமாக தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் சம்பந்தமாக சில முக்கிய புகைப்படங்கள் சிக்கி உள்ளதாகவும், அந்த புகைப்படங்களை அடையாளமாக வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கொள்ளையடித்த பின்பு கொள்ளையர்கள் தப்பிச்சென்ற இடங்கள் குறித்த தகவல்களும் தனிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: