கோவை ரவுடிகளின் அதிரடி வீடியோக்களால் அதிர்ச்சி: கத்தி, அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் மிரட்டல்

கோவை:  கோவையில் கடந்த 2021ம் ஆண்டில் ரவுடி குரங்கு ஸ்ரீராம் (23) என்பவர் சரவணம்பட்டியில் வெட்டி கொல்லப்பட்டார். இதற்கு பழி தீர்க்க, கடந்த 13ம் தேதி காலை, குரங்கு ஸ்ரீராமை கொலை செய்த ரவுடி கோகுல் (25) கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கோவை நீதிமன்றம் அருகே நடந்த இந்த கொலை பதட்டத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், கோவையில் சோசியல் மீடியாக்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரவுடிகள் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆயுதங்களுடன் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கு ஸ்ரீராம் இறக்கும் முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தைரியம் இருந்தால் என்னை தொட்டுப்பார், என் கூட மோத யாருக்கும் தைரியமில்லை எனக்கூறி வீடியோ பதிவு போட்டுள்ளார்.இதை கோகுலுக்கு அனுப்பி அவரை மிரட்டியுள்ளார். அவரும் பதிலுக்கு அவருக்கு மிரட்டல் வீடியோ அனுப்பியதாக தெரிகிறது. இந்த மோதல் உச்ச கட்டத்திற்கு சென்ற நிலையில், கோகுல் தனது ரவுடி கூட்டாளிகளுடன் சேர்ந்து குரங்கு ஸ்ரீராமை கொலை செய்துள்ளார். அதற்கு பின்னர் குரங்கு ஸ்ரீராம் பெயரை சொல்லி மேலும் பல ரவுடிகள் உருவாகி விட்டனர்.

தெல்லவாரி, பிரகா பிரதர்ஸ், ஸ்ரீராம் பிரதர்ஸ் பிளட் போன்ற பெயர்களில் அதிரடியான மிரட்டல் வீடியோக்களை வெளியிட்டனர். கத்தி, அரிவாளுடன் கானா பாடல்களை போட்டு இவர்கள் கோஷ்டியாக போட்டி வீடியோ பதிவுகளை அனுப்பி வந்துள்ளனர். சிலர், தங்களது கூட்டாளிகளை அடையாளப்படுத்த உடம்பில் டாட்டூ வரைந்து அதை போட்டோ வீடியோ எடுத்து எதிர் தரப்பினருக்கு அனுப்பி வந்துள்ளனர். சமீப காலமாக குரங்கு ஸ்ரீராம், கோகுல் தரப்பினர் இடையே வீடியோ, போட்டோ அனுப்பி மிரட்டி வந்துள்ளனர். இதன் உச்ச கட்டமாக கோகுல் கொலை செய்யப்பட்டார்.

முன்னதாக கோகுலை கொலை செய்வோம் என குரங்கு ஸ்ரீராம் படத்தை வைத்து வீடியோ பதிவுகளை இன்ஸ்டா கிராமில் வைரலாக பரப்பிவிட்டுள்ளனர். ரவுடிகள் சிலர், இளம்பெண் ஒருவரை உருட்டை கட்டை கொடுத்து நடக்க வைத்து மீம்ஸ் வீடியோ தயாரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர். ரத்தினபுரி, சின்னவேடம்பட்டி, கண்ணப்ப நகர், சங்கனூர் பள்ளம், மோர் மார்க்கெட், கணபதி என பல்வேறு பகுதியில் ஏரியா பிரித்து ரவுடிகள் அட்டகாசம் செய்து வருவதாக தெரிகிறது. பகிரங்கமாக சோசியல் மீடியாக்களில்  இவர்கள் போட்டி வீடியோக்களை அனுப்பி மோதி வருவதாக கூறப்படுகிறது.

இந்த ரவுடிகளின் சமூக வலைதள மோதல்கள் கொலை முயற்சி, தாக்குதல் என அடுத்தடுத்த கட்டடங்களுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடியிசத்தை ஆரம்ப நிலையில் அடக்காமல் விட்டதால் இவர்கள் எதற்கும் பயப்படாமல் கொலைகளில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு கமெண்ட்களை போட்டு இவர்கள் மிரட்டி வரும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. சில வீடியோக்களில் ரவுடிகள் கத்தி, வெட்டரிவாள், துப்பாக்கிகளுடன் வலம் வருகின்றனர்.

இந்த வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து நீக்கி விட்டனர். பேஸ்புக், வாட்ஸ் அப்களில் மேலும் பல ஆட்சேபரமான வீடியோக்கள் பரவியிருப்பதாக தெரிகிறது. போலீசார் கூறுகையில், ‘‘யார் ஆட்சேபரமான வீடியோக்களை வெளியிட்டனர் என கண்டறியும் பணி நடக்கிறது.

ரவுடியிச செயல்பாட்டில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழிக்கு பழியாக மோதல் ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு பணி நடக்கிறது’’ என்றனர்.

கோவை நகரில் 33 ரவுடிகள் கைது

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கோவை நகரில் 2 கொலைகளை தொடர்ந்து ரவுடி கேங் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பு வாகன தணிக்கை, விடுதி தணிக்கை பணிகள் கோவை வடக்கு, தெற்கு பகுதிகளில் நடக்கிறது. தெற்கு நகர்ப்பகுதியில் 7 வழக்குகள் பதிவானது. 36 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

5 கத்தி, கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. வடக்கு நகர்ப்பகுதியில் 4 வழக்குகள் பதிவானது. 28 வீடுகளில் நடந்த சோதனையில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 3 ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது. இதுவரை 11 வழக்குகளில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: