திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மதுரை மாநகராட்சி தயாரிக்குது மலிவு விலை இயற்கை உரங்கள்: கிலோ ரூ.30 முதல் 50 வரை விற்பனை

மதுரை: மதுரை மாநகராட்சி விவசாயிகளுக்காக இயற்கை உரங்களை தயாரித்து மலிவு விலையில் வேளாண்மைத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. இதற்கு விவசாயிகளிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இயற்கை உரங்களை கிலோ கணக்கில் விவசாயிகள் வாங்கிச்செல்கின்றனர். உர மையங்களை அதிகரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் மேற்கு ஆகிய 5 மண்டலங்களாக கொண்டுள்ளது. மொத்தம் 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் பரப்பளவு 51.82 சதுர கிலோ மீட்டரில் இருந்து 147.99 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. மாநகராட்சியின் மக்கள் தொகை 14.70 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை என்பது மதுரை மாநகராட்சியின் முக்கியப் பணிகளில் ஒன்று.

ஒவ்வொரு நாளும் தோராயமாக 650 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இது ஒரு தனி நபருக்கு 425 கிராம் என்ற அளவில் உள்ளது. இது தேசிய அளவின் குறியீட்டைவிட சற்று அதிகம். பெருகி வரும் மதுரை மாநகரத்தின் மக்கள் தொகை மற்றும் தினசரி நகருக்குள் வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கையே குப்பைகள் அதிகரிக்க முக்கிய காரணிகளாக உள்ளது. மதுரை மாநகராட்சி, தற்பொழுது குப்பை சேகரித்தல், வீடுதோறும் சென்று சேகரித்தல் மற்றும் குப்பைகளை பிரித்தல் என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் குப்பை சேகரிக்கும் முதன்மைப் பணியில் 2,800 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இரண்டாம் கட்டப்பணியில் குப்பை சேகரித்தலில் 150 வாகனங்கள் என்ற அடிப்படையிலும் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு வாகனம், என்ற அடிப்படையில் வணிக வளாகப் பகுதிகள், பேருந்து நிலையம், கோவில் பகுதிகள், குடிசைப் பகுதிகள் ஆகிய பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை  பயன்படுத்துவதன்  மூலம் செழுமையான விளைச்சல் கிடைக்கிறது. விலங்குகளின் கழிவு, இலைகள் போன்றவைகளை மக்கச்செய்து அவற்றை  இயற்கை  உரமாக மாநகராட்சியே தயாரித்து வருகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளைக்கலில் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை பணிகளை எளிதாக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன்படி, வார்டுப் பகுதிகளில் திடக்கழிவுகளை சேகரித்து உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. 41 மையங்களில் குப்பை தரம் பிரிப்பு மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் 41 மையங்கள் ரூ.33.50 கோடி மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்டது. இந்த 41 மையத்திலும் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக தத்தனேரி, மேனேந்தல், திருப்பரங்குன்றம், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் கோச்சடை பகுதியில் 2 மையங்களும், சேக்கிழார் தெரு, ஐ.ஐ.சாலை, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த மையங்களில் 44 தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்கும் கழிவுகளை நாள் ஒன்றுக்கு 25 டன் வீதம் பெறப்பட்டு உரமாக்கம் செய்யப்படுகிறது. இம்மையங்களில் அதனை கற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று கழிவுகளை தரம் பிரித்து பேட்டரி வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மூலமாக பெறப்படுகிறது. அனைத்துப் வார்டுப் பகுதிகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தாலும் சிலவற்றில் உரம் தயாரிக்கும் பணிகள் செய்யாமல் உள்ளது. இது தவிர கழிவுநீரேற்று நிலையங்கள், மயானங்கள்.

குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நுண்ணுயிர் உரமாக்கம் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிலோ கணக்கில் வாங்கிச் செல்லும் விவசாயிகள் இது குறித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கப்படுகிறது. குப்பைகள் உரமாக மாற 10 முதல் 15 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இயற்கை உரங்களை வாங்கி வீடுகளில் மாடித்தோட்டம் அமைத்தவர்களும் பயன்பெறலாம். வேளாண்மை துறை மூலம் மலிவு விலையில் மாநகராட்சி தயாரிக்கும் இயற்கை உரம் விற்கப்படுகிறது.

கிலோ கணக்கில் விவசாயிகள் வாங்கிச்செல்கின்றனர். வரவேற்பு கிடைத்துள்ளது’ என்றார். சமூக ஆர்வலர் ராஜேஷ் கூறுகையில், ‘இயற்கை உரம் தயாரிக்கும் மையங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதனை பராமரித்து 100 வார்டுகளிலும் மையங்களில் அதிகளவில் இயற்கை உரங்களை தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட வேண்டும். மாநகராட்சி மலிவு விலையில் உரத்தை வழங்குவது பாராட்டப்பட வேண்டும். ஏனெனில் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ இயற்கை உரம் ரூ.30 முதல் 50வரை விற்பனை செய்யப்படுகிறது’ என்றார்.

Related Stories: