தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும்: ஆம் ஆத்மி வலியுறுத்தல்

தென்காசி: தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் வலியுறுத்தி உள்ளார். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘மேக் இன் இந்தியா நம்பர் ஒன் என்ற பெயரில் உலக அரங்கில் நமது நாட்டை முதன்மையாக்க வலியுறுத்தி திருச்சி முதல் குமரி வரை ஆம் ஆத்மி கட்சி நடை பயணம் மேற்கொண்டு வருகிறது. தேசிய அளவில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ஜெயலலிதா நினைவிடத்தை ரூ.50 கோடியில் வடிவமைத்தார். போயஸ் கார்டன் இல்லத்தையும் நினைவிடம் ஆக்க அரசு பணத்தை செலவு செய்தார்.

கொரோனா சமயத்தில் கடும் நிதி பற்றாக்குறையிலும் இதை செய்ய அவர் முன் வந்தார். அதிமுக அமைச்சர்கள் பலர் மீது இன்னமும் ஊழல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை‌. தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும். புளியங்குடியில் எலுமிச்சை சாகுபடியாளர்களுக்கு சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கல்வி நிலைய கட்டிடங்களை சீரமைக்க வேண்டும். பாஜவிற்கு தமிழகத்தில் தலைவர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அண்ணாமலையை இறக்குமதி செய்துள்ளனர். அவர் ஊழலை கண்டித்து நடை பயணம் செல்வதாக கூறியிருக்கிறார். ரபேல் ஊழல் குறித்து முதலில் அவர் விளக்கட்டும்.‌ சாதாரண செல்போனுக்கு கூட பில் உள்ளது.

அம்பானிக்கும் அதானிக்கும் நிறுவனங்களை விற்று தனியார் நிறுவனங்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். 2024 பொதுத்தேர்தலில் பாஜவை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டு வருகிறது என்றார். பேட்டின் போது மாநில பொது செயலாளர் ஜோசப் ராஜா, மகளிர் அணி மாநில செயலாளர் ஸ்டெல்லா மேரி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆரிப், மாவட்டச் செயலாளர்கள் தென் சென்னை மணிகண்டன், வடசென்னை சோபியா, விழுப்புரம் சுகுமார், தஞ்சை மாவட்ட தலைவர் ரபீக், கரூர் மாவட்ட தலைவர் குமரன், தென்காசி ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: