இடைத்தேர்தலில் ஓபிஎஸ்ஸை பரப்புரைக்கு அழைக்க தேவையில்லை: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை பரப்புரைக்கு அழைக்க தேவையில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை உள்ளிட்டோர் சந்தித்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகாரளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை பரப்புரைக்கு அழைக்க தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக செயல்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுகவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.

மவுன புரட்சி நிச்சயமாக ஈரோடு கிழக்கில் ஏற்படும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டவர், இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: