தேனி மாவட்டத்தில் 100 இடங்களில் சாலை விழிப்புணர்வு விளம்பர போர்டுகள்

தேனி: தேனி மாவட்டத்தில் சாலை விழிப்புணர்வுக்காக மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் 100 இடங்களில் விளம்பர போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராமச் சாலைகள் என பல்வேறு வகையிலான சாலைகள் உள்ளன. இதில் திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம், தேனி வழியாக குமுளி வரை செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளது. மதுரையில் இருந்து தேனி வழியாக போடி, மூணாறுக்கு தேசியநெடுஞ்சாலை உள்ளது. மேலும் மாவட்டத்தில் மாவட்ட இதர சாலைகள் உள்ளன.

தேனி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களினால் 253 பேர் உயிரிழந்துள்ளனர். 802 பேர் ஊனமுற்றுள்ளனர். 2019ம் ஆண்டில் 249 பேர் உயிரிழந்துள்ளனர். 721 பேர் ஊனமடைந்துள்ளனர். 2020ம் ஆண்டில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். 607 பேர் ஊனமடைந்துள்ளனர். 2021ம் ஆண்டில் 226 பேர் உயிரிழந்துள்ளனர். 734 பேர் ஊனமடைந்துள்ளனர். 2022ம் ஆண்டில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 745 பேர் ஊனமடைந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சாலைவிபத்துக்களினால் 1205 பேர் உயிரிழந்துள்ளனர்.

3609 பேர் ஊனமடைந்துள்ளனர். சாலைவிபத்துக்கு பெரும்பாலும் சாலைவிதி மீறுவதே காரணமாக அமைகிறது. எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறையானது சாலை விதிகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு விளம்பர போர்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் தேனி உப கோட்டத்தில் மட்டும் 23 இடங்களில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இத்தகைய விழிப்புணர்வு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் சாலையில் கவனமாக செல்ல வேண்டும். வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும், பெல்ட் அணிய வேண்டும் போன்ற வாசகங்களுடன் கூடிய அழகிய படங்களுடன் கூடிய விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மாவட்டம் முழுவதும் சுமார் 100 இடங்களில் இத்தகைய விழிப்புணர்வு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: