காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 73 வயது பேராசிரியர் சைக்கிள் பயணம்: 5 ஆயிரம் கிமீ கடந்து விருதுநகர் வருகை

விருதுநகர்: இளைஞர்களின் மத்தியில் இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை வலியுறுத்தி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும், 73 வயதான பேராசிரியர் நேற்று விருதுநகர் வந்தார். இந்திய பாரம்பரியம், கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாக்கும் நடவடிக்கைகளை ‘ஸ்பிக்-மகே’ என்ற மக்கள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக டெல்லி ஐஐடி முன்னாள் பேராசிரியர், பத்ம விருது பெற்ற கிரண் சேத் (73) உள்ளார். இவர், இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்தாண்டு ஆக.11ல் நகரில் சைக்கிள் பயணத்தை தொடங்கிய இவர், 14 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து தமிழகம் வந்தவர் நேற்று விருதுநகர் வந்தார். இங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரண் சேத் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களின் மத்தியில் அதிகப்படுத்த வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயணமே சிறந்தது. அனைவரும் சைக்கிளை பயன்படுத்தினால், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படாது.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மாசு குறையும். மகாத்மாவின் எளிய வாழ்க்கை முறை, சிந்தனையை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இதுகுறித்து வரும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் வலியுறுத்தி வருகிறேன்’’ என்றார். 14 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 5 ஆயிரம் கிமீ தூரம் கடந்து தமிழகம் வந்துள்ள கிரண் சேத், பிப்.19ல் கன்னியாகுமரியில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

Related Stories: