புல்வாமா தாக்குதலின் 4ம் ஆண்டு நினைவு தினம்.. 40 வீரர்களின் உயிர் தியாகத்தை மறக்க மாட்டோம் என பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்தில் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வீரர்கள் இருக்கும்  பேருந்துகள் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோத செய்து பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி தரும் வகையில் பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானில் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தன.

இதனிடையே புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் உயிர் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுக் கூர்ந்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் வலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க உயிரிழந்த வீரர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது, என தெரிவித்துள்ளார்.

Related Stories: