துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தோர் கடும் குளிரால் பரிதவிப்பு

அங்காரா: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்கள் போதுமான உதவிகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதியில் கடந்த 6ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டு நேற்றுடன் ஒரு வாரம் ஆன நிலையில்,அடியமான் என்ற இடத்தில் இடிபாடுகளில் இருந்து 4 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டது.

இதே போல் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் குறித்த பல செய்திகள் தொலைக்காட்சிகளில் வந்த போதிலும்,உறைய வைக்கும் கடும் குளிர்,12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்த நிலையில் இனி இதே போன்று யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. நிலநடுக்கம் மற்றும் அதன் பிறகு ஏற்பட்ட நில அதிர்வுகளால் இரு நாடுகளிலும் மொத்த பலி எண்ணிக்கை  35 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வந்த பல நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து கான்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகள் ஆங்காங்கே மலை போல் குவிந்து கிடக்கின்றன. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள போலட் என்ற கிராமத்தில் அனைத்து வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. ஆனால் அந்த பகுதியில் வீடுகளை இழந்தவர்கள் வசிப்பதற்கு டென்ட் போன்ற எந்த வசதியும் கொடுக்கப்படவில்லை. இதனால் குளிரில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துருக்கியின் பல பகுதிகளிலும் அதே போன்ற நிலைமை உள்ளது.

மெக்சிகோவின் பல்கலைகழக பேராசிரியர் எடுவர்டோ ரீனோசோ அங்குலோ கூறுகையில்,‘ கட்டிட இடிபாடுகளில் இருந்து மக்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு’’ என்றார். லண்டன் பல்கலைகழக பேராசிரியர் டேவிட் அலெக்சாண்டர் கூறுகையில்,‘‘ பெரும்பாலான கட்டிடங்கள் தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளன. இதனால்தான் அவை இடிந்து விழுந்துள்ளன’’ என்றார். ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி மார்டின் கிரிபித் கூறுகையில்,‘‘ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிப்பதில் சர்வதேச சமூகம் தவறி விட்டது. உதவி வழங்குவதில் சிரியாவின் பல பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

Related Stories: