சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்: தயாநிதி மாறன் எம்.பி.யிடம் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப்பணிகள் அடுத்த மாதம் தொடக்கப்படுமு் என்று தன்னை சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி.யிடம் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேற்று ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை பணிகள் குறித்து மக்களவையில் நான் கேள்வி எழுப்பிய போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அதற்கு பதிலளித்திருந்தார்.  

அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ” தமிழகத்தில் நெடுஞ்சாலை  அமைப்பதற்கு ஒன்றிய அரசுக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.  மேலும் மதுரவாயல்- துறைமுகம் நெடுஞ்சாலை ஏன் இன்னும் ஆரம்பிக்காமல் தாமதம்  ஆகிறது. அதேப்போன்று சென்னையில் இருந்து வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை  என்பது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அதைப்போன்று நான்கு வழி  சாலைகளை ஆறு வழி சாலைகளாக்கும் பணிகள் மிக மிக தாமதமாகி கொண்டிருக்கிறது.  

இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அதனால் இந்த பணிகளை விரைந்து  முடிக்க தமிழகத்தின் சார்பாக அனைத்து உதவிகளையும் நாங்கள் தருவதற்கு  தயாராக இருக்கிறோம். அதனால் இந்த நிலுவை பணிகள் அனைத்தையும் விரைந்து  முடித்திட வேண்டும் என  முதல்வர் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தை  ஒன்றிய அமைச்சரிடம் கொடுத்தேன். இதையடுத்து அவர் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து எங்கெங்கே பிரச்னைகள் உள்ளது. அதனை எப்படி உடனடியாக சீர் செய்வது என்று விரைந்து ஆய்வு செய்து மக்களுக்கு பயனளிக்கும் விதமாக முழு ஒத்துழைப்பை தருகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக சென்னை-பெங்களூரு சாலையில் உள்ள  பிரச்சனையை கண்டறிந்து எங்கெங்கு சிக்கல் உள்ளதோ அதனை தீர்த்து வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை தலைவைரை சென்னைக்கு அனுப்பி தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் கலந்து ஆலோசித்து அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.    

மேலும் வரும் மார்ச் மாதம் இறுதிக்குள்  சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்  தொடங்கப்படும் என்று   நிதின் கட்கரி   தெரிவித்துள்ளார்.   அதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக  மனமார்ந்த நன்றியை அவரிடம் தெரிவித்தேன்.  சென்னை துறைமுகம்-மதுரவாயல் திட்டம் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது டி.ஆர்.பாலு தலைமையில் உருவாக்கி அப்போதைய முதல்வர் கலைஞரும், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும் ஒப்புதல் வழங்கி செயல்படுத்தினர். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த ஜெயலலிதா, இந்த திட்டம் திமுக அரசு கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக கிடப்பில் போட்டார்.  

 

இந்த நிலையில் தான் தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆட்சி பொறுப்பேற்றப் பின்னர் உடனடியாக இந்த திட்டத்தை துவங்கிட நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த திட்டம் நிறைவேறினால்தான் சென்னையின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை நாம் சீர் செய்ய முடியும். இதுபோன்ற சூழலில் தற்போது சுமார் ரூ.7ஆயிரம் கோடி மதிப்பு கொண்ட சென்னை துறைமுகம்- மதுரவாயல்  திட்டம் என்பது நிறைவேறும் தருணம் வந்து விட்டது. குறிப்பாக  இந்த திட்டத்திற்கு தற்போதைய சூழலில் மறு மதிப்பீடு செய்து அதற்கென்று வரும் புதிய திருத்தப்பட்ட தொகையையும் விரைந்து முழுமையாக ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியானது மட்டுமில்லாமல் வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.

குறிப்பாக  ஒன்றிய அரசுடன்  தமிழ்நாட்டிற்கான தேவைகளை ஒத்துழைப்போடு செய்து விரைவாக நிலுவைப் பணிகளை  முடிப்பதே தமிழக முதல்வரின் முக்கிய கடமையாக இருக்கிறது. அதனால் மேற்கண்ட  பணிகள் விரைவில் முடிவடைந்து தமிழ்நாட்டு மக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: