சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு களை கட்டிய பைக்காரா படகு இல்லம்

ஊட்டி : ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நீலகிரி  மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் சுமார் 22 கி மீ  தொலைவில் பைக்காரா  அணை அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மத்தியில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த  அணையில் உள்ள நீரை கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி  மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் பைக்காரா அணையில் இருந்து கடநாடு கூட்டு  குடிநீர் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர்  விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள்  இங்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.  இங்கு இயக்கப்படும் ஸ்பீட் படகு பிரசித்தி பெற்றதாகும். நீரை கிழித்து  கொண்டு செல்லும் ஸ்பீட் படகில் செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம்  காட்டுவார்கள்.

தற்போது ஊட்டியில் இதமான குளு குளு காலநிலை நிலவி வரும்  நிலையில் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக  காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக பைக்காரா படகு இல்லத்தில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக வனங்களுக்கு  நடுவே அணையில் ஸ்பீட் படகில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.  குழுவாக வந்திருந்தவர் மோட்டார் படகு மூலம் பயணித்து மகிழ்ந்தனர். தற்போது  மின் உற்பத்திக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் நீர் எடுக்கப்படுவதால்  நீர்மட்டம் குறைந்துள்ளது. இதேபோல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு  இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம்  காணப்பட்டது.

Related Stories: